Friday, May 2, 2014

நேற்றும் நாளையும்

வாழும் நிஜத்தில்
சிறு வயது பெரும் கனவு சில
சாதாரணமாய்  வலம் வரும்!
தேடும் கனவில் சில
அசாதாரண இலக்காய்த் தோன்றும்!
 நேற்றும் நாளையும் காற்றாக
இன்று மட்டும் ஏன் பாரமாக?!
காலத்தின் ஓட்டம்...
நிறைவில்லா மனம்...
கரைந்து போன ஓய்வு ...
சிற்றின்பத் தேடல்...
 மெய் பொய்யின் விகிதாசாரம்
மலை மடுவாய் போனதிங்கே!!!
செல்லும் பாதையில்
காணும் பொருளில் எல்லாம்
ஏதோ  ஒன்றை நினைவுபடுத்த,
இலக்கை அடைந்ததாய் மனம்  சிரிக்கும்!!!


Thursday, May 9, 2013

கைகோர்க்க வந்துவிடு!!!

முடிந்தவரை  தேடி விட்டேன்
துயில் கொள்ளும்முன் கண்ணில்
கொண்டபின்  கனவில்
காற்றில் கடைத்தெருவில்
பூவில் புன்னகையில்
கானலில் கண்ணாடியில்
நிலவில் நினைவில்
பிடிபடவில்லை அந்த பூமுகம் !!!
எங்கே இருப்பாளோ
எனக்கெனப் பிறந்தவள்!!!
என் வாழ்க்கைக்குப்  பொருள் தரவே
வருவதெப்போ சொல் தோழி???
தாயன்றி வேறொருத்தி தோள் தேடும்
இந்த சோர்ந்த மனம்
புன்சிரிப்பில் நாள் சிறக்க
பரிசென்ன தருவேனோ!?
உடலாலும் மனதாலும் உனைச் சுமக்க
தோள் மீது ஒரு பல்லக்கு,
உன் விரல் படவே ஏங்கி
மலர்ந்து கிடக்கும் என் பூந்தோட்டம்,
பரிவட்டம் கட்டிவிட்டு
பாதச் சுவடும் பார்த்து நடக்க
என் உடலுக்கும் மனதுக்கும்
புரிதலுக்கே பிறப்பெடுத்து
உரிமையோடு  என்னுயிர் தாங்க
நாளெல்லாம் நான் சேர்த்த
மனக்கழிவுகளை  வீசி விட்டு
என்ன வேண்டும் என்னவளுக்கு
எனச் சிந்திக்கும் பொன்தருணம்

என்று வருவாய்?? எப்போது தருவாய்???
                                   

Sunday, February 26, 2012

புரிந்தது உன் நோக்கம்

அர்த்தம் புரியாத போது
விலகிச் சென்றதும்
உன்னைக் கண்டதும்
என்னுள் எழுந்த உறுத்தலும்
எல்லாம் மாயை என்று
நான் நினைத்தது
மெய்யென்றே தோன்றியது!
காதல் திருமணங்கள்
காணும்போதெல்லாம்
என்னுள் உதிர்த்த தைரியம்...
செய்து பார்த்தாலென்ன என்ற
உண்மை மீறிய கற்பனை...
இது சாத்தியம் தானா
என்ற மனப் போராட்டம்...
இல்லையென முடிவு செய்து
நான் கண் துயிலும் வேளை
உன்னிடமிருந்து குறுந்தகவல்!
உடனே பதில் அனுப்பும் உத்வேகத்தில்
என்னிடம் காதலும் இல்லை...
காமமும் இல்லை...
நட்பென்று விலகிக் கொள்ள
நினைக்கவும் இல்லை...
உன்னோடு அளவளாவிய சுகம்...
அது மட்டும் போதுமென்று
நினைபதல்ல...
அவ்வாறே வாழ்கிறேன்!!!

Thursday, November 25, 2010

மனம் சொல்வது என்ன?

உள்ளூர மனம் நகைக்கிறது
அவ்வப்போது

விரக்தியின் உச்சத்தில்
உதறிவிட்ட உறவுகள்
செல்ல மறுத்த பயணங்கள்
சொல்ல மறந்த வார்த்தைகள்
பருவத்தே பெறவேண்டிய
சுகமான தருணங்கள்

இழக்கும் முன்னே மீட்பதாய் நினைத்து
தேடுவதைத்தான் இழக்கிறோம்
என்று தெரியாமல்

காலம் கடந்து
இன்னோர் தருணம் வருமா
என ஏங்கும்போது

உள்ளூர மனம் நகைக்கிறது
அவ்வப்போது

Monday, June 28, 2010

என்ன சொல்ல வந்தாய்?

உறவு சொல்லி பழகாமல்
ஊமையாய் வழி மறித்தாய்!!!
எல்லாப் பொழுதிலும்
ஏதேனும் ஒரு பொருளில்
உன் ஞாபகத்தை விதைத்து விட்டாய்!!!
துயில் கொள்ளும் நேரத்தில்
அசரீரியாய் சிரித்து நின்றாய்!!!
தலையணையில் முகம் புதைத்தும்
இமைகளுக்குள் இடம் பெயர்ந்தாய்!!!
அரைத்தூக்கம் கண் நெருங்க
விடியலைத் தொட்டு விட்டேன்!!!
நிலவை ஒதுக்கி விட்டு மீண்டும்
என் நிலவே! உனைக் காண ஓடி வந்தேன்!!!
மனப் புண்ணில் மலர் தடவி
ஒரு அந்நியனை அகதியாக்காதே!!!

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!