Monday, August 31, 2009

விலை

விலை பெற்று
வாங்கினேன் மனைவியை
விலை கொடுத்து விற்ற
அக்காவின் கல்யாணக் கடனுக்காக!!!

ஏன் இந்த மௌனம்?

பறக்கத் துடித்த என்
உயிர்ப் பறவையை
உன் விழி வாளால்
தடுத்து நிறுத்தினாய்!
ஆனால் இன்று ...
நான் பார்க்கத் துடிக்கும்
உன் இரு விழிகளை
மறைத்து வைத்து
தினம் கொஞ்சம் கொன்று பார்க்கிறாய்!??

Tuesday, August 11, 2009

எத்தனை நாளாச்சு

எத்தனை நாளாச்சு
தென்றலே உன்னைத் தழுவி ?!
எத்தனை இரவாச்சு
கனவே உன்னோடு பேசி ?!
எத்தனை யுகமாச்சு
பூவே உன்னோடு விளையாடி ?!
இமை மூடித் திறக்க நேரமில்லை...
இறைவா! ஏனிந்த
இயந்திர வாழ்க்கை?!!!

காதல் அழகு

கனவில் டூயட்!
கலைந்தபின் வாழ்த்து
உனக்கு மட்டும்!
என்னடி நியாயம்?!
காதல் சமுத்திரத்தை
மனதில் அணை கட்டினாலும்
கண்ணில் கசிவு வருமே!
உன்னில் ஏனில்லை
அந்த பௌதிக மாற்றம்?
உன்னை வைத்து உருவகப்படுத்திய
மனைவி என்ற பந்தம்
வேறொரு உருவில்
எப்படி பொருந்தும் ?
போலியை அசலாய்
நினைத்து வாழ
காலமெனும் போதை
கண்மறைக்கப் போகிறதோ ?
நகல் வைத்து உறவாடும்
நரக வாழ்க்கை
எனக்கு மட்டும் ஏனடி?!!

Friday, August 7, 2009

ஏக்கம்

தட்டித் தூங்க வைக்கத்
தாய்மடி இருந்தும்
நினைவுகளில் ஏக்கத்தைத்
ததும்ப விடும் தத்துப்பிள்ளை நான்!
தாலாட்டு பாடிய
வாய் கூட ஓயவில்லை
அன்னை மொழி கேட்க முடியா
அந்நியன் ஆகி விட்டேன்!
அரும்பிய மீசைப் பருவத்திலும்
ஆசையாய் என் தோள்மீது
கைபோடும் தந்தை
அடிக்கடி ஏமாந்து போகிறாராம்!
சண்டையிட்ட தலையணைகள்
இன்று தூக்கமில்லா இரவுகளில்
பேச்சுத் துணையாய்!!!

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!